'வீறுகவியரசர் முடியரசனாரின் பாடற்றொகுப்புகள் அனைத்தையும் இந்த வலைப்பூவில் படித்துச் சுவைக்கலாம்

Tuesday, September 24, 2019

முடியரசனார் - வாழ்க்கை

வீறுகவியரசர் முடியரசனார் -
வாழ்க்கைப் போர்

இயற் பெயர் : துரைராசு
புனை பெயர் : முடியரசன்
பெற்றோர் : சுப்புராயலு-சீதாலெட்சுமி
பிறந்த ஊர் : பெரியகுளம்
வாழ்ந்த ஊர் : காரைக்குடி

தோற்றம் : 7.10.1920
மறைவு : 3.12.1998
தொடக்கக் கல்வி : திண்ணைப் பள்ளி, பெரியகுளம் (1925),
  வேந்தன்பட்டி (1932).       சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி(1933-34).
மேற்கல்வி : பிரவேசபண்டிதம், சன்மார்க்கசபை,   மேலைச்சிவபுரி (1934-39). வித்துவான், கணேசர் செந்தமிழ்க்கல்லூரி,           மேலைச்சிவபுரி (1939-43).
பணி : தமிழாசிரியர், முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி, சென்னை (1947-49).   மீ.சு.உயர்நிலைப்பள்ளி, காரைக்குடி(1949-78). தமிழியற்புலம், மதுரைப் பல்கலைக்கழகம்,   நாடகக் காவியப்பணி (1985).
திருமணம் : 2.2.1949 (கொள்கை வழிச் சாதிமறுப்புத்திருமணம்)
துணைவியார் : கலைச்செல்வி  (சரஸ்வதி என்ற பெயரின் தமிழாக்கம்)
   மக்கள்    மருமக்கள்      பேரப் பிள்ளைகள்   கொள்ளுப் பேரர்கள்
1. குமுதம் + பாண்டியன்   = 1. அருட்செல்வன்              2. திருப்பாவை + விசயகுமார் = அதியமான்
2. பாரி   + பூங்கோதை    = 1. ஓவியம் + விவேக் = பூங்கொடி.
3. அன்னம் + சற்குணம்    = 1. செழியன் + சிந்து = கலைமகள்.      2. இனியன்.
4. குமணன் + தேன்மொழி  = 1. அமுதன் + கிரேசி      2. யாழிசை.
5. செல்வம் + சுசீலா       = 1. கலைக்கோ      2. வெண்ணிலா (எ) குழலிசை.
6. அல்லி  + பாண்டியன   =  1. முகிலன்.

பிற குறிப்புகள், சிறப்புகள்
****************************
இளம் பருவத்தில் இலக்கிய உணர்வை ஊட்டியவர் தாய்மாமன் துரைசாமி அவர்கள்.
20ஆம் அகவை வரைக் கடவுளைப் பற்றிய கவிதைகள்  இயற்றினார். அவை கிடைத்தில (1939).
தந்தை பெரியாரின் தன்மான இயக்கத் தொடர்பு (1940).
21ஆம் அகவை முதல் சமுதாயச் சூழல், மொழி, நாடு, இயற்கை  இவற்றையே பாடினார் (1940).
21ஆம் அகவையில் இயற்றிய ‘சாதி என்பது நமக்கு ஏனோ?’ என்ற  கவிதை பேரறிஞர் அண்ணாவால் ‘திராவிட நாடு’ இதழில் வெளியிடப்பட்டது (1942).
தன்மான இயக்கத் தொடர்பால் ‘வித்துவான்’ தேர்வில் தோல்வியுறுமாறு செய்யப்பட்டார் (1943).
நவாபு டி.எஸ்.இராசமாணிக்கம் நாடகக் குழுவில் பாடல், உரையாடல்  எழுதும் பணி. அங்கிருந்த சிறை  வாழ்க்கையும், மதவழிபாட்டு முறைகளும் பிடிக்காமல் வெளியேறினார் (1944).
பெரியார் தலைமையில் அண்ணா முன்னிலையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில், மாநாட்டுத் தீர்மானத்தை முடியரசன் முன்மொழிந்தார்.பேராசிரியர் க.அன்பழகன் வழி மொழிந்தார். மாநாட்டில் அறிஞர் அண்ணாவுடன் முதல் நேரடிச் சந்திப்பு (1945).
‘குழிபிறை’ என்ற ஊரில் ஆசிரியப் பணி (1945).
புதுவை மாநிலத்திற்கு அருகில் உள்ள மயிலத்தில் தலைமறைவாக இருந்து படித்து ‘வித்துவான் பட்டம் பெற்றார் (1947).
சென்னையில், மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணரும், டாக்டர். மா.இராசமாணிக்கனாரும் பணி புரிந்த முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியர் பணி (1947-49)
சென்னையில் பல்வேறு இதழ்களில் இலக்கியப் பணி- ‘பொன்னி’ இதழில் ‘பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக’ அறிமுகம்-திராவிட இயக்கத்  தலைவர்கள், தமிழறிஞர்களுடன் தொடர்பு (1947-49).
தான் கொண்ட கொள்கைக்காகக் கைம்பெண்-சாதி மறுப்புத் திருமணம்  செய்துகொள்ள தாயாரிடம் வேண்டுதல், ஒரே மகன் என்பதால், இசைவு  தரத் தாயார் மறுத்தல். சாதி மறுப்புத் திருமணத்திற்கு மட்டும் பெற்றோர் இசைதல் (1948).
பெற்றோர் ஏற்பாட்டில் ‘கலைச்செல்வி’ எனும் நலத்தகையாரை  பேராசிரியர்   மயிலை சிவமுத்து தலைமையில் சாதி மறுப்புத் திருமணம் செய்து     கொண்டார் (1949).
திருமணமான ஆண்டே துணைவியாருடன் இந்தி எதிர்ப்புப் போரில் பங்கேற்றார் (1949)
காரைக்குடியில் மீ.சு.உயர்நிலைப்பள்ளியில் தமிழாசான் பணியேற்றார் 1949)
சாதி மறுப்பு மணத்தின் தேவையைப் பற்றிக் கவிதை பல பாடியதோடு   இருந்துவிடாமல் தாமும் சாதி மறுப்புத் திருமணம்  செய்துகொண்டு, தம் பிள்ளைகள் அனைவருக்கும் அவ்வாறே செய்து தம் கொள்கைக்கு வெற்றி தேடித்தந்ததன் மூலம் ‘அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்’ என்னும் வள்ளுவன் வாக்கைத் தோல்வியுறச் செய்தார்.
“என் மூத்த வழித்தோன்றல் முடியரசனே” எனப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனால் போற்றப் பெற்றார் (1950).
தலை மகள் குமுதம் பிறப்பு (9.4.1950).
தலை மகன் பாரி பிறப்பு (4.8.1952).
குருதி உமிழும் கொடுநோய்க்கு இலக்காகி, புதுக்கோட்டைத் தமிழ்ப்புரவலர் அண்ணல் பு.அ.சுப்பிரமணியனார் அருட்கொடையால் உயிர் பிழைத்தார் (1955).
மூன்றாவது மகவான ஆண் மகவு பிறத்தல். செய்நன்றியின் பொருட்டு, தன்னுயிர் காத்த அண்ணல் சுப்பிரமணியனார் நினைவாக அம்மகனுக்கு ‘சுப்பிரமணியன்’ எனப் பெயரிட்டார் (1955).
தமிழண்ணலுடன்  இணைந்து ‘எழில்’ என்ற இலக்கிய இதழ் நடத்தினார் (1955).
மகள் அன்னம் பிறப்பு (3.1.1958).
மகன் ‘சுப்பிரமணியன்’ மறைவு. கவிஞர் பெருந்துயரம் அடைதல் (1959).
மகன் குமணன் பிறப்பு (20.4.1960).
நடிகவேள் எம்.ஆர்,ராதா நடித்த ‘கண்ணாடி மாளிகை’ என்ற திரைப்படத்திற்கு பாடல்கள்-உரையாடல் எழுதினார். திரைத்துறையின் சிறுமைகளைக் கண்டு வெறுப்புற்றுத் தன்மானத்துக்கும் தன் கொள்கைக்கும், அத்துறை சிறிதும் ஒத்து வராததால் அதிலிருந்து வெளியேறினார் (1960-62).
மீண்டும் காரைக்குடியில் தமிழாசிரியர் பணி (1962).
மகன் செல்வம் பிறப்பு (3.3.1963).
இந்தி எதிர்ப்புப் போரில் ஈடுபட்டதாகக் காவல் துறையினர் வழக்கு(1965).
 ‘பூங்கொடி’ நூலுக்குத் தமிழ்நாடு அரசு தடைசெய்ய ஏற்பாடு (1966).
ஆட்சி மாற்றத்தால் ‘பூங்கொடி’ தடை ஏற்பாடு விலக்கம் (1967).
மகள் அல்லி பிறப்பு (8.5.1968).
மகள் குமுதம் திருமணம் (8.6.1975).
எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆனவுடன் அமைந்த தமிழ்நாடு அரசு, சென்னையில் முடியரசனார் தலைமையில், அண்ணா விழாக் கவியரங்கம் நடத்தியது (15.09.1977).
நாடி வந்த அரசவைப் பதவியை ஏற்க மறுத்தார் (15.09.1977).
தமிழாசிரியப் பணி ஓய்வு (1978).
மகள் அன்னம் திருமணம் (6.9.1979).
மகன் பாரி திருமணம் (29.12.1983).
மதுரை பல்கலைக்கழகம், தமிழியற்புலத்தில் ‘இளம்பெருவழுதி’ நாடகக் காப்பியப் பணி (1985).
நோய் வாய்ப்படல் (1990).
மகன் குமணன் திருமணம் (24,2,1991).
மகன் செல்வம் திருமணம் (8.11.1992).
மகள் அல்லி திருமணம் (1.10.1995).
இடர்ப்பாடுகளும், இன்னல்களும் வந்தபோதும் கொண்ட கொள்கையிலிருந்து இறுதிவரை வழுவாமல், கொள்கைக் குன்றமாக - தடம்புரளாத் தங்கமாக - தன்மானச் சிங்கமாக - தமிழ் வேழமாக வாழ்ந்தவர், பணம், பதவி, பட்டம், பகட்டுக்குப் பணியாமல், அரசவைப் பதவிகள் நாடி வந்தபோது அவற்றைப் புறக்கணித்தும், ‘வளையா முடியரசர்’ என்றும், ‘வணங்கா முடியரசர்’ என்றும் புகழ்பெற்றவர். தன்மானக் கொள்கையால் மைய, மாநில அரசின் அரிய பல விருதுகளை இழந்தவர். பல்லாயிரம் இளைஞர்களைத் தமிழ் வீறும், வேட்கையும் பெறச் செய்தவர். கனவிலும் கவிதை பாடுபவர்.
தம் வாழ்நாளில் இறுதியாக அவர் இயற்றிய கவிதை:-

“வாளால் பிளப்பினும் வாழ்நாள் இழப்பினும் வஞ்சமனக்
  கேளார் குழுமிக் கெடுதிகள் சூழினும் பூமியில்வாழ்
நாளெலாம் வாட்டும் நலிவே உறினும் நற்றமிழே
ஆளாதல் திண்ணம் அடியேன் நினது மலரடிக்கே.”

No comments:

Post a Comment